கன்வர் யாத்திரை விவகாரம் : அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி..
கன்வார் யாத்ரா வழித்தட உணவகங்களில் உரிமையாளர் பெயரை காட்ட வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தராகண்ட், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒவ்வோரு ஆண்டும் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த வழிபாட்டு முறையானது, வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து, பிறகு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அந்த நீரைக் கொண்டு அபிஷேகம் நடத்துவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை இன்று ( ஜூலை 22) தொடங்குகிறது. இதனால் உத்தரபிரதேசம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.
இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) உத்தரவிட்டார். இதன்படி தள்ளுவண்டி கடைகள் உள்பட அனைத்து உணவகங்களும், கடைகளும் தங்கள் உரிமையாளரின் பெயரை உணவகத்தின் பெயர்ப் பலகையில் வைத்திருக்க வேண்டும் எனவும், கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதகவும் யோகி ஆதித்யநாத் ஹெரிவித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், யாத்திரை செல்லும் பாதையில் கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுதும்படி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், கடை முன்பு உரிமையாளர்களின் பெயர் பலகையை வைக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது.