கர்நாடகாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சாரம் - முதலமைச்சர் அறிவிப்பு

 
Siddaramaiah

கர்நாடகாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். 

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.  கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி, வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. இந்த நிலையில், கடந்த 02ம் தேதி முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் இந்த திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள இலவச மின்சாரம், யாருக்கெல்லா வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறினார்.