கர்நாடகாவில் எடியூரப்பா பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு

 
Karnataka election

கர்நாடக மாநிலம் சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா மகன் விஜயேந்திரா பிரச்சாரம் செய்ய சென்ற போது பஞ்சாரா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அவரது சிகாரிபுரா தொகுதியில் அவரது மகன் விஜயேந்திரா போட்டியிடுகிறார்.  இன்று சிகாரிபுரா தொகுதி தர்லகட்டா கிராமத்தில் விஜயேந்திரா பாஜக தொண்டர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென கிராமத்தில் குறிப்பாக அங்கிருந்து பஞ்சாரா சமூக மக்கள் ஒன்று சேர்ந்து விஜயேந்திராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அண்மையில் பாஜக அரசு இட ஒதுக்கீட்டை மறு சீரமைப்பு செய்த போது தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு சதவீதமும் முக்கியத்துவமும் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டி பஞ்சாரா சமூக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

கடந்த மாதம் இறுதியில் நடந்த போராட்டத்தின் போது எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எடியூரப்பா 7 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அவரது சொந்த தொகுதியில் அவரது மகன் பிரச்சாரத்திற்கு சென்ற போது பஞ்சாரா சமூக மக்கள் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக அவர் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்து திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.