கர்நாடக தேர்தல்: நிர்மலா சீதாராமன், பசவராஜ் பொம்மை, எடியூரப்பா வாக்களிப்பு ..

 
கர்நாடக தேர்தல்: நிர்மலா சீதாராமன், பசவராஜ் பொம்மை, எடியூரப்பா வாக்களிப்பு ..

கர்நாடக சட்டப்பேரவை  தேர்தலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.  

 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று ( மே மாதம் 10-ந்தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.   காலை 7 தொடங்கியுள்ள  வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்! வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37, 777 இடங்களில் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  
 Karnataka Elections 2023
விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஹுப்பாலியில் உள்ள ஹனுமான் கோவிலில் வழிபாடு செய்த முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தன வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா,  தனது மகன் பிஒய் விஜயேந்திராவுடன் ஷிகாரிபுராவில் உள்ள ஹுச்சராயா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, அங்குள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

election

இந்தமுறை  விஜயேந்திரர் தனது தந்தை எடியூரப்பா வழக்கமாக போட்டியிடும் பாரம்பரிய தொகுதியான ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. சந்தேகம் எதுவும் இல்லை என்றும் பாஜக 130-150 இடங்களில் வெற்றி பெறும்” என்று  நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல், பெங்களூரு ஜெயாநகரில் உள்ள வாக்குச் சாவடியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை பதிவு செய்தார்.  இன்று பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.