பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் - குமாரசாமி தாக்கு

 
Kumarasamy

பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும்  நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக கடந்த வாரம் திங்கள் கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல்  செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து துமகூரு மாவட்டத்தில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பிரசாரம் செய்தார். அப்ப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, பல மாநில முதல்-மந்திரிகள் வருகிறார்கள். காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் தலைவர்கள் வருகிறார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பிரசாரம் செய்ய யாரும் தேவையில்லை. எங்கள் கட்சி தொண்டர்களே போதும், அவர்களே நட்சத்திர பேச்சாளர்கள் ஆவார்கள். பா.ஜனதா, காங்கிரசும் ஊழல் கட்சிகள். ஜனதாதளம்(எஸ்) தான் விவசாயிகள், ஏழைகளுக்கான கட்சியாகும்.  தேசிய கட்சிகளால் கர்நாடகத்திற்கு எந்த பயனும் இல்லை. இதனை மாநில மக்கள் புரிந்து கொண்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியை நிச்சயமாக ஆதரிப்பார்கள். இவ்வாறு குமாரசாமி பேசினார்