கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் நாளை திறப்பு!

 
school

நிபா வைரஸ் பரவல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது.

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. மொத்தமாக 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் இரண்டு பேர்  உயிரிழந்தனர். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவிய நிலையில், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் காரணமாக நிபா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டது. கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 9 பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  

கேரளாவை மிரட்டும் ‘நிபா வைரஸ்’… 12 வயது சிறுவன் பரிதாப மரணம்!

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 23ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாததால் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் பள்ளி, கல்லூரிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.