ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வது சிறுபிள்ளைத்தனமானது - கிரண் ரீஜிஜூ

 
kiren

மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வது சிறுபிள்ளைத்தனமான முயற்சி என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரீஜிஜூ கூறியுள்ளார். 

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி ஒரு சமூகத்தையே திருடர் என கூறியுள்ளார் என்ற குற்றம்சாட்டி ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மோடி சமூகம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.  இந்நிலையில், சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்யவுள்ளார். சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யவுள்ளார். 

இந்த நிலையில், ராகுல்காந்தி மேல்முறையீடு குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரீஜிஜூ கூறியதாவது:- மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் செல்கிறார். ராகுல்காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம். மேல்முறையீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்ல வேண்டியம் அவசியம் இல்லை. பொதுவாக, எந்தவொரு குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. ராகுல் காந்தி செய்யும் மேல்முறையீடு நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும். என்று கூறியுள்ளார்.