எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

 
Lok Sabha

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், பெண்களுக்கு நடந்த கொடூரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 10 நாட்களாக முடங்கியது.  

இந்நிலையில், இன்று 11 வது நாளாக இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.