திருமணத்தில் அதிகபட்சம் 50 விருந்தினர்கள் தான், மக்களவை காங்கிரஸ் எம்.பி. அறிமுகம் செய்த தனிநபர் மசோதா

 
திருமணம்

மக்களவை காங்கிரஸ் எம்.பி.ஜஸ்பிர் சிங் கில், திருமணங்கள் மற்றும் பண்டிகைகள் போன்ற சமூக நிகழ்வுகளில் வீண் செலவுகளை குறைக்கும் நோக்கில் மக்களவையில் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அமைச்சராக இல்லாத ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனிப்பட்ட உறுப்பினர் என்று அழைக்கப்படுகிறார். இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பொதுநலன் மற்றும் சட்டமன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் மசோதாக்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

ஜஸ்பிர் சிங் கில்

அந்த வகையில், மக்களவை காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பிர் சிங் கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, திருமணம் மற்றும் பண்டிகைகள் போன்ற சமூக நிகழ்வுகளில் வீண் செலவுகளை தடுக்கும் நோக்கில் தனிநபர் உறுப்பினர் மசோதாவை அறிமுகம் செய்தார். சிறப்பு சந்தர்ப்பங்களுக்கான வீண் செலவினங்களை தடுக்கும் மசோதா என்ற தலைப்பில் முன்மொழியப்பட்ட இந்த மசோதாவில், மணமகள் வீட்டுக்கு வரும் திருமண விருந்தினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 50 என்று வரம்பிடவும், உணவு வகைகளின் எண்ணிக்கையை 10ஆக குறைக்கவும், பரிசு அல்லது மங்களகரமான பிரசாதங்களை வெறும் ரூ.2,500க்குள் கட்டுப்படுத்தவும் கோரப்பட்டுள்ளது.

மக்களவை

இந்த மசோதா, தாழ்த்தப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும், பெண் சிசுக் கொலை- தாயின் வயிற்றில் உள்ள பெண் குழந்தையை கொல்வதை குறைக்க இது பங்களிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பிர் கிங் கில் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா? என்பது தெரியவரும். இதுபோல் பல முக்கியமான தனிநபர் மசோதாக்கள் விவாதத்திறகு வருவதும் பிறகு அவை அமலாவதும் அரிதாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.