எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளி - மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

 
lokh sabha lokh sabha

அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

’ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட புன்னியம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இந்த நிலையில், அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சை கண்டித்து நாடாளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். முன்னதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.