பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானை கொல்ல சதி: ஹரியானாவை சேர்ந்த ஒருவர் கைது!
நடிகர் சல்மான்கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை நவி மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். சுகா என்ற அந்த நபர், ஹரியானாவின் பானிபட்டில் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டார். அவர் நவி மும்பைக்கு அழைத்து வரப்பட்டு இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குச் செல்லும் வழியில் அவரைக் கொலை செய்வதற்காக கடந்த ஜூன் மாதத்தில் நடந்த சதி முறியடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் பந்த்ராவில் உள்ள சல்மான்கானின் வீட்டுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினைத் தொடர்ந்து இந்தச் சதி சம்பவம் நடந்தது.
ஹரியானாவைச் சேர்ந்த பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் தனது வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் சல்மான் கான் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார். கடந்த ஜனவரி மாதத்தில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பன்வாலில் உள்ள தனது பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சல்மான் கான் தெரிவித்திருந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக சல்மான் கானின் இந்த வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 – 70 பேரை களமிறக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஏப்.24ம் தேதி பான்வேல் காவல்நிலையத்தில் பலர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.