ராணுவ பாதுகாப்பு கோரி மணிப்பூர் பழங்குடியினர் மனு - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

 
supreme court

மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையில் இருந்து பழங்குடியின மக்களை பாதுகாக்க ராணுவத்த அனுப்ப உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.  இந்நிலையில், மைதேயி சமூகத்தினரை பட்டியலின பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நடத்திய பேரணிக்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் வெடித்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.  இந்தக் கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் வன்முறை வெடித்தது.

manipur

இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், குகி பழங்குடியினரை இந்திய ராணுவம் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது. இது முற்றிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் என்று தெரிவித்ததுடன், இந்த வழக்கு வருகிற ஜூலை 3-ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தது. எனினும், இதுபற்றி மத்திய அரசு கோர்ட்டில் கூறும்போது, மணிப்பூரில் பாதுகாப்பு முகமைகள் களமிறக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியை சிறந்த முறையில் செய்து வருகின்றன என்று தெரிவித்து உள்ளது.