அம்மாடியோவ்... 1,116 உணவுகளுடன் மருமகனுக்கு விருந்து வைத்த மாமியார்
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் உங்குடூரில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 1116 விதமான உணவுகளுடன் விருந்து வைத்த மாமியார் வீட்டாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகைக்காக மாமியார் வீடுகளுக்குச் சென்ற மருமகன்களுக்கு மாமியார் வீட்டில் வைக்கும் விருந்தோம்பல் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. குண்டூர் மாவட்டம் தெனாலியில், முரளிகிருஷ்ணா மற்றும் மாதவிலாதா தம்பதியினர் சங்கராந்திக்காக முதல் முறையாக தங்கள் வீட்டிற்கு வந்திருந்த தங்கள் புதிய மருமகன் ஸ்ரீதத்தா மற்றும் மகள் மௌனிகாவிற்கு 158 வகையான உணவுகளுடன் இந்த ஆண்டு முதல் ஆச்சிரியமான விருந்து ஏற்பாடு செய்து செய்திகளில் இடம்பிடித்தனர். இந்த சாதனையை நரசிப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் கலாவதி தம்பதியினர் முறியடித்தனர் அவர்கள் தங்கள் புதிய மருமகன் ஸ்ரீஹர்ஷா மற்றும் மகள் லட்சுமி நவ்யா ஆகியோருக்கு 290 வகையான உணவுகளுடன் சுவையான விருந்தை வழங்கினர்.
இந்தநிலையில் ஏலுரு மாவட்டம் உங்குட்டூர் மண்டலத்தில் உள்ள உங்குடூர் மண்டலம் கைகலூரு கிராமத்தை சேர்ந்த சர்வதேச வைஷ்ய கூட்டமைப்பு சேவா தளத்தின் மாநிலத் தலைவர் கோனா ஹனுமான் பாபு மற்றும் கல்யாணி தம்பதியினர், மேற்கு கோதாவரி மாவட்டம் தடேபள்ளிகுடேமைச் சேர்ந்த மருமகன் நாராயணம் சஞ்சய் மற்றும் மகள் ஸ்ரீஜலா ஆகியோருக்கு 1,116 விதமான உணவுகளுடன் கூடிய உணவைப் பரிமாறி புதிய சாதனை படைத்தனர். திருமணத்திற்குப் பிறகு முதல் சங்கராந்திக்கு மாமியார் வீட்டிற்கு வந்திருந்த சஞ்சய்க்கு, 1,116 விதமான உணவுகளுடன் விருந்து அளிக்கப்பட்டது. மாயாபஜார் படத்தில் கடோத்கஜன் திருமண விருந்தை சாப்பிட்டதை நினைவுப்படுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையால் மிரட்டப்பட்ட உணவு விருந்தை புதிய மருமகனும் மகளும் மிரண்டுபோய் அவற்றைச் சாப்பிடத் தொடங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


