நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி

 
tn

தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி எம்.பி.

TN

 மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்,  ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனைக் காரணம் காட்டி அவர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த நிலையில், சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி  குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த  குஜராத் நீதிமன்றம், சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, மனுவையும்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதன் காரணமாக ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். 

Rahul

இதில் உச்ச நீதிமன்றம் ,  2 ஆண்டுகால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது.  இந்நிலையில் தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வருகை புரிந்தார். கிட்டத்தட்ட 136 நாட்களுக்கு பிறகு நாடாளுமன்றம் வந்த அவர், மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்.


 நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ராகுலை வரவேற்ற நிலையில் , ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத்தொடர்ந்து  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.