அதானி குழுமத்தின் நிதி மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக தேசிய பங்குச் சந்தைக்கு வெளியே காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

 
பாய் ஜக்தபாப்பை இழுத்து செல்லும் போலீசார்

அதானி குழுமத்தின் நிதி மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக தேசிய பங்குச் சந்தைக்கு வெளியே காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்களை மும்பை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. ஆனால் இதனை அதானி குழுமம் மறுத்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டது. மேலும், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

 அதானி குழும பங்குகள்..

இந்நிலையில், நேற்று அதானி குழுமத்தின் நிதி மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக மும்பையில் தேசிய பங்குச் சந்தைக்கு (என்.எஸ்.இ.) வெளியே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாய் ஜக்தபாப் உள்ளிட்ட அந்த கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதானி குழுமத்தின் மோசடிக்கு தேசிய பங்குச் சந்தை உதவியதாகவும் காங்கிரஸ்  தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.

காங்கிரஸ்

தேசிய பங்குச் சந்தைக்கு வெளியே காங்கிரஸார் போராட்டம் நடத்தியதை அறிந்து அங்கு வந்த மும்பை போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு வீடியோவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாய் ஜக்தபாப்பை போலீசார் இழுத்து செல்வதை காணலாம்.