கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் - சரத் பவார்!

 
sharad pawar

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும்  நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக கடந்த வாரம் திங்கள் கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல்  செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Karnataka

இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனக்கு கிடைத்த தகவலின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். கேரளா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் பா.ஜனதா அல்லாத அரசு தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.