ஒடிசா ரயில் விபத்து : இன்று 125 ரயில் சேவைகள் ரத்து..

 
train

ஒடிசா ரயில் விபத்தையொட்டி 125 ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.  

கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில்  மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது.
 

train accident
அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் , தொடர்ந்து நேற்று  விபத்து நடந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை அகற்றும் அணி நடைபெற்றது.  சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மொத்தம் 4 வழித்தடங்கள் உள்ள நிலையில் அதில்  2 ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டுவிட்டன. அதன்பின்னர் 51 மணி நேரம் கழித்து நேற்று இரவு 11.30 மணியளவில் சரக்கு ரயிலும், 60 மணி நேரம் கழித்து இன்ரு காலை பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டன.   எஞ்சிய 2 வழித்தடங்களில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  

ஒடிசா ரயில் விபத்து : இன்று 125 ரயில் சேவைகள் ரத்து..

இந்த நிலையில்,  தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால் ஒடிசா வழியாக கடந்து செல்லும் 125 ரயில்கள் இன்று  ரத்து செய்யப்பட்டுள்ளன. 56 விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாகவும்,  சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை-சாலிமர் கோரமண்டல் ரயில் சென்னையிலிருந்து 3 மணி நேரம் தாமதமாக (10.45-க்கு) புறப்படும் என்றும்,  விபத்துக்குள்ளான இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து 2 நாட்களில் ரயில் பாதைகள் பயன்பாட்டிற்கு வரும் எனவும்  ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.