ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி.. பாதிப்பு 2 ஆக உயர்வு...

 
ஒமைக்ரான்

இந்தியாவில்  நாளுக்கு நாள்  ஒமைக்ரான் பாதிப்பு  அதிகரித்து வருகிறது.  12 மாநிலங்களில் 216 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மஹாரஷ்டிரா மற்றும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 60 ஐ தொட்டிருக்கிறது.  ஒமைக்ரான் பரவல் வேகமும், விகிதமும் 4 நாட்களில் 2 மடங்காக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா 3ஆவது அலை

இந்நிலையில்  ஆந்திராவில் ஒமைக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது.  ஆந்திராவில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு இருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்யானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 39 வயது பெண். பின்னர் கார் மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதி சென்றுள்ளார். அவருக்கு கடந்த 12 ஆம் தேதி ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது சோதனை மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள ஜெனோம் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.  இன்று ( 22.12.2021 ) வெளியான ஆய்வின் முடிவில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஆந்திரா ஒமைக்ரான் பாதிப்பு 2 ஆக உயர்வு

அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு  ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில், அவர்களுக்கு நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளன.  இதனையடுத்து ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட  அந்த பெண் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதன் மூலம் ஆந்திராவில் ஒமைக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது.