கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் - கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை!

 
election commision

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு இருந்து கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும்  நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக கடந்த திங்கள் கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல்  செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு இருந்து சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதாவது வருகிற 10-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அதாவது 8-ந்தேதி மாலை 6 மணி முதல் 10-ந்தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு தொடர்பாக வீடியோ, விவாதம், உரையாடல் ஆகியவற்றை டி.வி சேனல்கள், ஊடகங்கள், ஆன்லைன் சேனல்கள், சமூகவலைத்தளங்களில் வெளியிடக் கூடாது.