திமுக எதிர்ப்பு! பெங்களூருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து

 
patna meeting

பெங்களுருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சி தலைவர்களின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியயுள்ளன.  கடந்த சில நாட்களுக்கு முன்னர்(ஜூன்23ம் தேதி) பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர். அதில் பாஜகவை வீழ்த்த நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்தனர். மேலும் அடுத்த கூட்டம் ஜூலையில் நடைபெறும் என அறிவித்தனர். இதனிடையே எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பெங்களூருவில் ஜூலை 13,14-ம் தேதிகளில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் நடைபெறும் நகரத்தை மாற்ற திமுக கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேகதாது பிரச்சினையால் பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க திமுக தயக்கம் காட்டிய நிலையில் கூட்டம் ரத்தாகியுள்ளது. மேலும் மராட்டிய அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த கூட்டம்சிம்லா அல்லது ஜெய்ப்பூரில் கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.