நாடாளுமன்ற வளாகத்தில் எதிக்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!
மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வலியுறுத்தி எதிர்கட்சி எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு கூடியது. முதல் நாளிலேயே ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே , நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கிய உடனே பாஜக மூத்த எம்.பி., ஜக்தம்பிகா பால் மக்களவைக்கு தலைமை தாங்கினார். அப்போது பேசுவதற்காக எழுந்து நின்ற மக்களவை எதிர்கட்சிச் தலைவர் ராகுல் காந்திக்கு, வாய்ப்பு அளிக்காததால் மீண்டும் அமளியானது. அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாநிலங்களவையை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தி வருகிறார். இந்நிலையில் 2வது நாளாக இன்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திர்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு, கோஷங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் பகுதியில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் , சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும், எஸ்.ஐ.ஆர்( பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த,) குறித்து அவையில் பேச அனுமதிக்க வேண்டும், ஜெக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.


