மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகள் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை

 
Opposition

மணிப்பூர் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநிலத்திற்கு சென்றிருந்த இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இன மக்களுக்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், அந்த மாநிலமே போர்க்களமாக காட்சி அளித்து வருகிறது. வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயம அடைந்துள்ளனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த நில நாட்களுக்கு முன்னர் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. இந்த வழக்கை மாநில அரசு சிபிஐ-யிடம் ஒப்படைத்த நிலையில்,  அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மணிப்பூர் புறப்பட்டுச் சென்ற இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குழு..

இதனிடையே மணிப்பூர் மாநிலத்தின் தற்போதையை நிலை குறித்து அறிய இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் குழு மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றது. இந்தியா கூட்டணியில் உள்ள 21 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றனர். அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து டெல்லி திரும்பிய எதிர்க்கட்சிகள் குழு இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநிலத்திற்கு சென்றிருந்த இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.