ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

 
ashwini vaishnav

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது.   10 முதல் 12 பெட்டிகள் தரம் புரண்டதால் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன அதைத் தொடர்ந்து பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இந்த ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளும் தடம் புரண்டன.  இதைத்தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியுள்ளார். தமிழர்கள் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் திரும்பி சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். ரயில் விபத்து நடந்தது எப்படி என்பதை கண்டறிய உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். விபத்துக்கான காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியமானது எனவும் கூறினார்.