நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் நாளை தொடக்கம்

 
Parliament

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாளை தொடங்குகிறது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் முறையாக, இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், அதன் பின்னர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. 

நாளை மறுதினம் காலை 11 மணிக்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இக்கூட்டத்தொடருக்கு அடுத்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுதான் என்று சொல்லப்படுகிறது. அதேபோல தேர்தல் இருப்பதால் பல புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சாமானியர்களுக்கு சாதகமாக சில அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.