மணிப்பூர் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

 
rajya sabha

மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இனத்திற்கும் கடந்த மே மாதம் முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கு வன்முறையாக மாறி அந்த மாநிலத்தையே சீரழித்து வருகிறது. குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டு நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 

இதனிடையே இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கின. இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் அறிவித்தார்.