அதி கனமழை குறித்து எந்த தகவலும் எங்களுக்கு முன்கூட்டியே சொல்லப்படவில்லை- பினராயி விஜயன்
கேரளாவில் அதிகனமழை பெய்யும் என்று ஆறு நாட்களுக்கு முன்பே தெரிவித்தோம் என மத்திய நிதியமைச்சர் அமித்ஷா கூறிய நிலையில், அதி கனமழை குறித்து எந்த தகவலும் எங்களுக்கு முன்கூட்டியே சொல்லப்படவில்லை என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது. அதாவது நிலச்சரிவு குறித்து 7 நாட்களுக்கு முன்பாக ஜூலை 23ம் தேதியே கேரளா அரசுக்கு வார்னிங் வழங்கப்பட்டது. அதன்பிறகு ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்து வார்னிங் செய்யப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தயவு செய்து மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்துப் பார்க்க வேண்டும். பேரிடர் ஏற்படும் எனத் தெரிந்து 9 தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளாவுக்கு அனுப்பிவைத்தோம். எங்கள் பேச்சைக் கேளுங்கள் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தோம்” எனக் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “கேரளாவில் அதி கனமழை குறித்து எந்த தகவலும் எங்களுக்கு முன்கூட்டியே சொல்லப்படவில்லை. வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சிக்கல்கள் எதிர்பாராதவை என்பதை மத்திய அரசும் உணர வேண்டும். நீங்கள் மற்றவர்களின் மீது பழியை சுமத்த முயற்சிக்க முடியாது. இது பழி போடும் நேரம். இந்திய வானிலை மையம் அறிவித்த மழையின் அளவைவிட அதிகனமழையே பெய்தது. பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட பின்பே, காலை 6 மணியளவில்தான் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது.” என்றார்.