குஜராத்தை தாக்கும் பிபோர்ஜாய் புயல் - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

 
PM Modi

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள பிபோர்ஜாய் புயல் குஜராத்தை தாக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மதியம் 1 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்து குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சூப்பர் புயலாக பைபர்ஜோய் உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்புயல் குஜராத் மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது  கனமழை மற்றும் 150 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்ச், ஜாம்நகர், மொர்பி, கிர் சோம்நாத், போர்பந்தர், தேவ்பூமி த்வர்கா மாவட்டங்கள் கனமழை மற்றும் சூறாவளி காற்றால் பாதிக்கபடலாம் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கட்ச் மாவட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் வேலை தொடங்கியுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள அதிதீவிர புயலான பிபோர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பிரதமர் மோடி இன்று பிற்பகல் 1 மணி அளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுதல், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட முக்கியம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.