“இந்த போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் கெஞ்சியது! அழுதது”- மோடி
இந்தியா தன்னுடைய எதிர்ப்பையும், பலத்தையும் முழுமையாக காட்டியுள்ளது என சிந்தூர் ஆபரேஷன் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியா தன்னுடைய எதிர்ப்பையும், பலத்தையும் முழுமையாக காட்டியுள்ளது. இந்த போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் கெஞ்சியது. இந்தியா அடித்து நொறுக்கியதால், போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தற்காலிக போர் நிறுத்தம்தான், பாகிஸ்தான் தீவிரமாகக் கண்காணிப்போம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நீதி இது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் படைகள் மரியாதை செலுத்தியதை உலகமே பார்த்தது. பாகிஸ்தானின் அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் இனி செல்லாது. பயங்கரவாத விஷயத்தில் துளியும் சமரசமில்லை.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சிறப்பாகச் செயல்பட்டதை உலகமே கண்டது. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது. ஒவ்வொரு இந்தியரும் அமைதியையே விரும்புகின்றனர். தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது. தீவிரவாதமும் அமைதி பேச்சு வார்த்தையும் வர்த்தகமும் ஒன்றாக இருக்க முடியாது. இன்று புத்த பெளர்ணமி. இந்தியா புத்தர் வழியில் அமைதியை நாடுகிறது. வளரும் பாரதத்துக்கு இந்த ஒற்றுமையும், வலிமையும் முக்கியம். இந்தியாவின் பதிலடி தாங்க முடியாமல் பாகிஸ்தான் தப்பிக்க முயற்சிகளில் ஈடுபட்டது. உலக நாடுகள் முன்பாக கதறி அழுதது. பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் நமது ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு கெஞ்சும் நிலையில் இருந்தனர். நமது ஆபரேஷன்களை தான் நாம் நிறுத்தி இருக்கிறோம். ஆனால் நமது முப்படைகளின் உஷார் நிலை அப்படியேதான் இருக்கிறது. நமது படைகள் போருக்கு தயாராக இருக்கிறது. தீவிரவாதத்தை எந்த ஒரு வழியிலும் பொறுத்துக் கொள்ள முடியாது, இதில் ஜீரோ டோலரன்ஸ் என்பது தான் இந்தியாவின் கொள்கை. தற்போதைய காலகட்டம் போருக்கான காலகட்டம் கிடையாது, அதே சூழலில் இது தீவிரவாதிகளுக்கான காலகட்டமும் கிடையாது. பாகிஸ்தான் தனது அச்சுறுத்தினை நிறுத்தவில்லை என்றால் ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும். அணுகுண்டு ஆயுதத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டும் வேலைகளில் யாரும் ஈடுபடாதீர்கள்” என்றார்.


