ஆந்திர முதல்வர் மீது கல்வீசி தாக்குதல் : துப்பு கொடுப்பவருக்கு சன்மானம் - காவல்துறை அதிரடி அறிவிப்பு!!
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , ஆந்திர முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 13ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேர்தல் வாகனத்தில் நின்றபடி பரப்புரை மேற்கொண்டு இருந்த ஜெகன்மோகன் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை வீசி தாக்குதல் நடத்தினார். இதனால் ஜெகன்மோகனின் நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர மாநில காவல்துறை அறிவித்துள்ளது. கல் வீசிய மர்ம நபரை பிடிப்பதற்காக 6 தனிப்படை அமைக்கப்பட்டது. 3 நாட்களாக முயன்றும், மர்ம நபரை பிடிக்க முடியாத நிலையில் ஆந்திர போலீஸ் சன்மானம் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்த ஊழியர் ஒருவர் ஜெகன்மோகனை கத்தியால் குத்த முயன்றது கவனிக்கத்தக்கது.


