யுபிஎஸ்சி புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்..
யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, யு.பி.எஸ்.சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி இருந்தார். மனோஜ் சோனியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படாமலே இருந்தது. தற்போது மனோஜ் சோனியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், யுபிஎஸ்சி உறுப்பினராக இருக்கும் ப்ரீத்தி சுதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாளை (ஆகஸ்ட் 1ம் தேதி) பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநில கேடர் அதிகாரியான ப்ரீத்தி சுதன், இதற்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம், அதுசார்ந்த சுகாதார வல்லுநர்கள் ஆணையம் மற்றும் இ-சிகரெட் மீதான தடை பற்றிய சட்டம் தவிர, பேட்டி பச்சாவ் -பேட்டி படோ மற்றும் ஆயுஷ்மான் பாரத் பணிகளை வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு. மேலும் ப்ரீத்தி சுதன் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின் COP-8 இன் தலைவராகவும், தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் பதிலளிப்புக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO)சுயாதீன குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.