இந்தியா சுயசார்பு நாடாக மாறி வருகிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு

 
Draupadi murmu

வெளிநாடுகளின் ஆதரவில் இருந்த இந்தியா தற்போது சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளதாகவும், சுயசார்பு நாடாக மாறி வருவதாவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், அதன் பின்னர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளனர். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது நாளை காலை 11 மணிக்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் முறையாக, இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். நாடாளுமன்றம் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

President draupadi


இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: இந்திய நாடு ஏழைகள் இல்லாத நாடாகவும், மத்திய வர்க்கத்தினரும் நல்ல நிலையில் இருப்பவர்களாக அடுத்த 25 ஆண்டுகளில் மாற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானதாக ஆகிறது.
 9 ஆண்டுகளில் இந்தியாவை, உலகம் பார்க்கும் பார்வை மாறியுள்ளது. அதில் மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது. வெளிநாடுகளின் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுயசார்பு நாடாக மாறி வருகிறது. நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நாடு நடைபோட ஆரம்பித்துள்ளது.
ஊழலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. நம்முடைய நடவடிக்கைகளால், இந்தியா பொருளாதாரத்தில் 5வது இடத்தை அடைந்துள்ளது. இந்த செயல்கள் தான் வேராக இருந்து 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும். இன்று இந்தியாவின் வளர்ச்சியை மனதில் கொண்டு, எதற்கும் கலங்காத நிலையான அரசு அமைந்துள்ளது.  ஏழைகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு, அவர்களுக்கு வலிமை, சக்தி அளிக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்தியாவின் நன்மைக்காக அரசு எடுத்த முடிவை உலக நாடுகள் பாராட்டுகின்றன. அரசு மட்டத்தில் ஊழல் என்பது சமுதாயத்திற்கு தீங்கானது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. அரசுத்துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற விதத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.  பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறது. டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இவ்வாறு கூறினார்.