குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை - புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்படும் என அறிவிப்பு!

 
tn

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

draupadi murmu

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மைசூர் வரும் குடியரசுத் தலைவர் பின் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு தி எலிபன்ட் விஸ்பரஸ் ஆவண  படத்தில் இடம்பெற்ற பொம்மை - பெள்ளி குடியிருக்கும் பகுதிக்கு செல்வதோடு யானைகள் முகாமையும் பார்வையிடுகிறார். இதையடுத்து மைசூர் விமான நிலையம் செல்லும் குடியரசுத் தலைவர் இன்று மாலை 6.30 மணி அளவில் சென்னை வந்தடைகிறார்.  விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை  ஆளுநர் ஆர்.என் ரவியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்கிறார்.

stalin murmu

இதன் பிறகு இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசு தலைவர் , நாளை காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதை தொடர்ந்து நாளை மாலை மகாகவி சுப்ரமணிய பாரதியார் என்ற பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலை திறந்து வைத்து பாரதியார் திருவுருவப்படத்தையும் திறந்து வைக்கிறார். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார். நிகழ்ச்சியை  முடித்துவிட்டு இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் திங்கட்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.

tn

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, ஆகஸ்ட் 8ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளவுள்ளார் முர்மு. இதன் காரணமாக குடியரசுத் தலைவர் செல்லும் வழிகளில் உள்ள சாலையோர உணவுக் கடை, பழக் கடைகளுக்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.