அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

 
PM Modi

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். 

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா சென்றார். ஐ.நா தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  இதனைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் முக்கியமான வளர்ச்சியை பாராட்டினார். கடந்த ஏழு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது என கூறினார். 
 
இந்நிலையில், அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் எகிப்து நாட்டின் பிரதமர் அப்தெல் பதாவை சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.