ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - வருகிற 21ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

 
Rahul

அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த மனு வருகிற 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தின் போது எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று முடிவது ஏன் என்று ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக  சூரத் பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . அத்துடன் அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கியது. இதனையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைதாண்டனை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் கடந்த 08ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தண்டனையை நிறுத்தி வைக்க உரிய காரணங்கள் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

supreme court

இதனிடையே அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று பட்டியலிடப்பட்ட நிலையில், இந்த மனுவை வருகிற ஜூலை 21ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், வருகிற ஜூலை 21ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.