எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னா சென்றடைந்தார் ராகுல் காந்தி

 
Rahul Gandhi

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி பாட்னா சென்றடைந்தார். 
 
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வரும் நிலையில் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக நாளை பீகார் தலைநகர்  பாட்னாவில்  எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் முன்னால் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் விமானம் மூலம் தற்போது பாட்னா சென்றடைந்துள்ளனர். பாட்னா விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.