2 ஆண்டுகள் சிறை தண்டனை - ராகுல் காந்தியின் எம்.பி. பதவிக்கு ஆபத்து?

 
rahul gandhi

மோடி தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார்.  ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக பாஜக அவதூறு வழக்கு தொடர்ந்தது. சூரத் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.  இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனையும் வழங்கினார். இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது. ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமின் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  

இந்நிலையில், சிறை தண்டனை காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யாக உள்ளார். இந்த தண்டனையால் அவரதுஎம்.பி. பதவி பறிக்கப்படுகிற ஆபத்து உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.