வயநாடு விரையும் ராகுல், பிரியங்கா..

 
வயநாடு விரையும் ராகுல், பிரியங்கா.. 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு பாதிப்புகளை பார்வையிட  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வயநாடு செல்கின்றனர்.

கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக கடந்த திங்கள்கிழமை 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடின் ஆகிய கிராமங்கள் மண்ணில் புதையுண்டு போயுள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஐ கடந்துவிட்டது. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தன்னார்வலர்கள் என பலர் மீட்புப் பணியில் களமிறங்கியுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணி கடும் சவாலாகியுள்ளது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகே மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 6,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 82 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசியல் கட்சிகள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கேரள அரசுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.  

வயநாடு விரையும் ராகுல், பிரியங்கா.. 

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் நேற்றைய தினமே  வயநாடு வர திட்டமிட்டனர். ஆனால்,மோசமான வானிலை நிலவுவதாலும், தொடர் மழை பெய்வதாலும்  வயநாடு வரமுடியாது என அதிகாரிகள் தெரிவித்ததால் அவர்களது பயணம் தடைபட்டது. 

இதையடுத்து அவர்கள் இன்று வயநாடு வந்து, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். மேம்பாடியில் உள்ள அரசு பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும்,  டாக்டர் மூபென் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்திக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட்டு தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் ரேபரேலி தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். மறுதேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.