``பாஜகவிற்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது''- ராகுல்காந்தி ஆவேசம்
மக்களவைத் தேர்தலில் முறைகேடு நடக்காமல் இருந்திருந்தால், மோடி மீண்டும் பிரதமராக வந்திருக்க மாட்டார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, “இந்தியாவில் தேர்தல் முறை இறந்துவிட்டது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி! மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு எவ்வாறு மோசடி செய்தது என்பதை இன்னும் சில நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறோம். தேர்தல் ஆணையம் செய்த தவறுகளுக்கு ஆததாரம் இருக்கிறது. தேர்தல் ஆணைய மோசடிகளை நிரூபிப்பேம். இந்திய தேர்தல் ஆணையம் செத்துவிட்டது. 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் வாக்காளர்கள் போலி. ஆதாரத்தை வெளியிட்டால் தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும்.
மகாராஷ்டிரா தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. தேர்தல் முறைகேடுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். மக்களவை தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே புதிய வாக்காளர்கள் தோன்றுகின்றனர். புதிதாக தோன்றும் வாக்காளர்களின் வாக்கு பாஜகவுக்கு செல்கிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ்க்கு ஒரு இடம் கூட கிடைக்காதது ஆச்சர்யம் தருகிறது. நான் ஒரு ராஜா என்ற கருத்துக்கு எதிரானவன் இந்த ராகுல் காந்தி. 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் முதல் தற்போது வரை ஏதோ தவறு இருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.


