கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை
கேரளாவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், கொச்சின் வரை 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று முதலே திருவனந்தபுரம், கொல்லம், கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் மழை பெய்து வருகிறது. திடீரென்று இன்று அதிகாலை முதல் மழை அதிக அளவு பெய்ய துவங்கியதால் நகர் பகுதியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொச்சின் பாலாறி வட்டம், காக்க நாடு, எடப்பள்ளி மற்றும் கொல்லம் மலையோர பகுதிகளிலும் தற்பொழுது வரை மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று காலை 9.10 மணி முதல் 10.10 மணி வரை அதிகப்படியான மழை பெய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 எம்.எம்.மழை பெய்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்தில் இந்த அளவுக்கு மழை பெய்தால் மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. நகர் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை மலையோர பகுதி மக்களும் நகர் பகுதி மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


