அசாமில் அரிய வெள்ளை நிற மான்.. வைரலாகும் வீடியோ....

 
வெள்ளை மான்

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் ஒரு  அரிய வெள்ளை மான் சுற்றித்திரியும் வீடியோ வைரலாகி வருகிறது.

அசாம் காசிரங்கா தேசிய பூங்காவில் , உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத பல அரிய விலங்கினங்களும் , தாவர வகைகளும்  உள்ளன. அசாம் காடுகளில், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை என அரியவகை விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.  சிறந்த இயற்கை எழிலும், உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ள பூங்கா,  , 1985-ம் ஆண்டு  யுனெஸ்கோவின்  உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் காசிரங்கா தேசிய பூங்கா சேர்க்கப்பட்டது. 2006-ம் ஆண்டு, இந்தப் பூங்கா புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, இந்தப் பூங்கா ஒரு முக்கியமான பறவை பாதுகாப்பு பகுதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற மான்

காசிரங்கா தேசிய பூங்கா உலகில் அழிந்து வரும் இனமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் .தாயகமாக இருந்துவருகிறது. இத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த காசிரங்காவில், தற்போது சுவீடன் நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை வெள்ளை மான் ஒன்று  சுற்றித்திரிகிறது. மற்ற விலங்குகளுடன் இந்த வெள்ளை நிற மான் சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதளாங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

வெள்ளை நிற மான்

டிசம்பர் 16 ஆம் தேதி இணையத்தில் வெளியான இந்த வீடியோவை  பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.  ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் உள்ளூர் வாசிகள் அளித்த தகவலின்பேரில், இந்த அரிய வகை மானை புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில்  காசிரங்கா தேசிய பூங்காவின் (KNP) கோட்ட வன  அதிகாரி   ரமேஷ் கோகோய்,  இந்த வெள்ளை மான் தென்படுவது இது இரண்டாவது முறை என்றும், அது அவ்வப்போது மற்ற பழுப்பு நிர  மான்களுடன் உணவுக்காக பூங்காவிற்கு வெளியே வருகிறது  என்றும் தெரிவித்தார்.  காசிரங்காவில் மொத்தம் 40,000   மான்கள் இருப்பதாகவும், அதில்  இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு அரியவகை வெள்ளை மான்களும் காணப்படுகிறது  என்று தெரிவித்தார்.