நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் - ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் கைது!

 
Parliament Attack

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13ம் தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பட்டாசுகளை வீசியது தெரியவந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மென் பொறியாளர் சாய்கிருஸ்ணா என்பவர் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவின் பாகல்கோட் நகரை  சேர்ந்த சாய்கிருஷ்ணாவை டெல்லி போலீஸ் கைது செய்தது. சாய்கிருஷ்ணாவின் தந்தை கர்நாடக மாநில காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.