6 மாதங்களில் ரூ.670 கோடி! நிரம்பி வழியும் திருப்பதி உண்டியல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு ஆறு மாதங்களில் 670.21 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் 25ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஆன்லைனில் வெளியிடப்படக்கூடிய டிக்கட்டுகள் அனைத்தும் சில மணி நேரங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் சாமி தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் இலவச தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் சுமார் 15 முதல் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்று உண்டியல் வருமானமும் தொடர்ந்து அதிகரித்து சாதனை படைத்து வருகிறது.
கொரோனா பேரிடர் பிறகு தொடர்ந்து மாதத்திற்கு ரூ.100 கோடிக்கு குறையாமல் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு இந்த ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான உண்டி வருமானம் ரூ.670.21 கோடி பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர். இதில் ஜனவரியில் ரூ.116.46 கோடியும், பிப்ரவரியில் ரூ.111.71 கோடியும், மார்ச்சில் ரூ.118.49 கோடியும், ஏப்ரலில் ரூ.101.63 கோடியும், மே மாதத்தில் ரூ.108.28 கோடியும், ஜுன் மாதத்தில் ரூ.113.64 கோடி உண்டியலில் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், ஏழு மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்து விவரங்களையும் அறிவித்தது.
அதன்படி 24 வங்கிகளில் உள்ள நிரந்தர வைப்பு மற்றும் தங்க டெபாசிட் விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்தக் கணக்கீடுகளின்படி. கடந்த ஆண்டு அக்டோபர் 31 வரை ரூ.17,816.15 கோடி ரொக்கம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 10786.67 கிலோ தங்கத்தையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 438.99 கிலோ தங்க கட்டிகளை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.