மகர விளக்கு பூஜை; வரும் 15ம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறப்பு!

 
sabarimala

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை ஆட்டம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் ஆரம்பித்தன. இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று நடைபெறும் சிறப்பு பூஜையை ஒட்டி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

sabarimala

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பக்தர்களும், 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கனவே அறிவித்ததன்படி பக்தர்கள் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ்கள் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.