ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பான வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

 
 ₹2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது RBI!

ரூ.2,000 நோட்டுகளை ஆவணங்கள் இல்லாமல் மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள 2000 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதேபோல் தங்களது வங்கி கணக்கிலும் டெபாசிட் செய்து வருகின்றனர். வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். 

இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளை ஆவணங்கள் இல்லாமல், மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  2000 நோட்டுகளை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், எஸ்பிஐ அறிவிப்புக்கு எதிரான மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.