புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10-ஆம் தேதியும் 11 ஆம் தேதியும் கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக மழை பாதிப்பை கணக்கிட்டு மஞ்சள், ஆரஞ்சு, ரெட் என தனித்தனியாக எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அந்த வகையில் நாளையும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் புதுச்சேரிக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. எனவே, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் நாளை மறுநாளும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கனமழையால் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரில் பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.