புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா - 144 தடை உத்தரவு

 
144

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவையொட்டி அந்த பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்து டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
 
தலைநகர் டெல்லியில்  64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன்  அமைக்கப்பட்டுள்ள  புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக  புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி,  மக்களவை சபாநாயகருடன்  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர். குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது.  அதேபோல் கிறிஸ்தவம், இஸ்லாமியம், பௌத்தம் உள்ளிட்ட  அனைத்து குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது.  இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை , தமிழக ஆதீனங்கள் 21 பேரும் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.  அப்போது செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஆதீனங்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ஆசி பெற்றார். அதன்பிறகு,  சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் சோழர்கால செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி.  

Parliament

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவையொட்டி அந்த பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்து டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி புதிய நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.  பேரணியின் முடிவில் நாடாளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப்போவதாக கூறி உள்ளனர்.  இதனால், டெல்லியின் முக்கிய எல்லை பகுதிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடுப்புகள் மற்றும் முள் வேலிகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.