தெலங்கானா- சத்தீஸ்கர் எல்லையில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை...

 
நக்ஸலைட்ஸ்

தெலங்கானா- சத்தீஸ்கர் எல்லையில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 மாவேயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  தெலங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதியான சுக்மா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டராம்  காலை 7 மணியளவில் வனப்பகுதியில் சத்தீஸ்கர் காவல் துறையினரும்,  சிஆர்பிஎஃப் வீரர்களும்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

மாவோயிஸ்டுகள்

அப்போது மாவோயிஸ்டுகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்த போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.  மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் , காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை  ஏற்பட்டது. இரு தரப்பினரும்  சரமாரியாக  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்,  மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்டுகள்

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினரில் நால்வர் பெண்கள் என்றும்,  அதில் சார்லா பகுதியின் மாவோயிஸ்ட் அமைப்பின் கமாண்டர் மதுவும் ஒருவர் என கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் இந்த சண்டை நீடித்ததாகவும், உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், பயங்கரமான வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.