நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை

 
congress meeting

பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார்.  ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக பாஜக அவதூறு வழக்கு தொடர்ந்தது. சூரத் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.  இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனையும் வழங்கினார். இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது. ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமின் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறை தண்டனை காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் காங். மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம், அதானி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.