இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன் - சரத் பவார்

 
sharad pawar

இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய சரத் பவார் கூறியுள்ளார். 

சரத் பவார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1999ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அது முதல் அந்த கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், மும்பையில் நேற்று அவரது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், யாரும் எதிர்பாராத வண்ணம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  மேலும், சரத் பவார் கூறுகையில், எனது அரசியல் பயணம் 1960 மே 1ம் தேதி தொடங்கியது, அதன் பின்னர் கடந்த 63 ஆண்டுகளாக இடைவேளையின்றி தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவிற்கு பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறேன். எனவே ஒரு படி பின்வாங்குவது அவசியம். அதனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்து இருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரத் பவார் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சரத் பவார் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒய்.பி. சவான் அரங்கு முன் திரண்டு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.  அப்போது அங்கு வந்த சரத்பவார் தொண்டர்களை சமரசப்படுத்தும் விதமாக அவர்கள் மத்தியில் பேசியதாவது: உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். எனது முடிவை எடுக்கும் முன் நான் உங்களின் நம்பிக்கையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், எனது முடிவை நீங்கள் அனுமதித்து இருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.  கட்சியின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் நான் ராஜினாமா முடிவை எடுத்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்