திருப்பதி செல்லும் தமிழக பக்தர்களுக்கு தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு!

 
tirupathi

தமிழகத்திலிருந்து நடைபயணமாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அனைத்து மாநில மக்களையும் அனுமதிக்க வேண்டும் என வெகுவாக கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து தற்போது அனைத்து மாநில மக்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா  நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

tirupathi

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து நடைபயணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு 20 முதல் 30 தூரத்திலும் பல்வேறு வசதிகளுடன் கூடிய நிரந்தர தங்கும் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சுப்பாரெட்டி நேற்று வந்திருந்தார். தமிழகம் - புதுச்சேரிக்கான உள்ளூர் ஆலோசனை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டியிடம் பணி ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பத்மாவதி தாயார் கோவில் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். தமிழக பக்தர்களின் வசதிக்காக நிரந்தர தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது. நடை பயணமாக செல்லும் பக்தர்கள் அங்கேயே தங்கி ஓய்வெடுத்து சமைத்து உண்ட பின்னர் பயணத்தை தொடரலாம். குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை ஸ்ரீவாரி கோவில் கட்டுவதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் இடங்களை ஒதுக்கி தர அரசு அனுமதித்துள்ளது. ஸ்ரீவாரி கோயிலின் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.